Labels

Wednesday, May 15, 2024

பெண்மை என்றொரு கற்பிதம்

*தினம் ஒரு புத்தகம்* ---------------------------------------- பெண் சமத்துவம் குறித்து மேடைகளில் ,விழா நாட்களில் , மகளிர் தின கொண்டாட்ட நேரங்களில் மட்டுமே குரல்கள் உரக்கக் கேட்கின்றன, அதனால் மாற்றங்கள் சாத்தியமா என்றால் கேள்விக் குறி தான். அப்படியல்ல , குடும்பம் , சமூகம் , பள்ளி , ஊடகம் என எல்லா இடங்களிலும் இந்தக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் , ஓயாமல் அலை அடிப்பது போது பெண்களின் விடுதலை பற்றியும் பெண் சமத்துவம் குறித்தும் பெண்ணிய சிந்தனைகளை முன் வைத்தும் உரையாடல்களும் விவாதங்களும் உருவாகி மாற்றத்திற்கானப் பாதையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை செய்தியை இந்த நூலின் வழியாக , 64 பக்கங்களிலும், 360° பாகையில் நம்மை சுழன்று பார்க்கும்படி தருகிறார் ஆசிரியர் . இந்தக் கட்டுரைத் தொகுப்பு நூல் செம்மலர் இலக்கிய இதழில் 14 அத்த்தியாயங்களாக எழுதப்பட்டு இருக்கின்றது. முதல் அத்யாயத்தில் தொடங்கி இறுதி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவே நம்மை வலியுறுத்துகிறது நூலாசிரியரின் கேள்விகளும் ஆதங்கமும். நூலிலிருந்து பெண்மையின் அர்த்தம் காலந்தோறும் மாறி வருகிறது ஆண்மை, பெண்மை என்றால் என்ன ? என்ற வினாக்களை முன் வைத்து, பெண் விடுதலை , பெண்சமத்துவம் என்பதெல்லாம் இந்த மாறி வரும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் தான் சாத்தியம். சொற்களே பாலினப் பாகுபாடு கொண்டிருக்கின்ற சூழலில் என்ன செய்வது ? கருப்பையும் மார்பகமும் தான் பெண் என்று கூறும் மனிதர்களை என்னவென்று சொல்வது ? மறு உற்பத்திக்கு தேவை பெண் என்ற ஒரு சாரரின் பார்வையை அறிவியல் நோக்கித் திருப்பி அமீபா முதல் பல்வேறு உயிரினங்களின் இன உற்பத்தியில் பெண்கள் (அ) ஆண்கள் இருப்பதில்லையே , ஆண் , பெண் பேதம் இயற்கையின் படைப்பு அல்ல எனப் பதிவு செய்கிறது பெண் என்றால் அழகு என்பதே இந்த சமூகத்தால் திரும்பத் திரும்பக் கட்டமைக்கப்படுவது குறித்தும் , இனப் பெருக்கத்தோடு பெண்ணை இறுக்கமாக இணைக்கும் பார்வை குறித்தும், ஆண் பெண் சமத்துவம் குறித்தும் பதிவு செய்கிறது. அறிவியல் என்ன சொல்கிறது? அமீபா , பிளாஸ்மோடியா உள்ளிட்ட அனைத்து உயிரிகளிலும் ஆண் - பெண் பாகுபாடு இல்லாமலேயே இனப்பெருக்கம் நடப்பதையும் , தவளை , நத்தை , மான்இவற்றின் இனப்பெருக்க வழிமுறைகளைக் கூறி, கருச் செல்கள் சந்திப்பதை உறுதி செய்ய ஆண் , பெண் உயிர்கள் நெருக்கமாக இருப்பதையே புணர்ச்சி என்கிறோம் அது ஒரு தற்செயல் நிகழ்வே. இயற்கை தான் மற்றபடி ஒன்றுமில்லை என்பதைப் படிக்கும் போது இதில் புனிதம் என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை , திருந்துங்கள் சமூகமே. இனப்பெருக்கம் என்பது ஆண் பெண் பால் உறவு கொண்டும் நடக்கிறது , இல்லாமலும் நடக்கிறது என்பது தானே இயற்கை , குழந்தை பெறத்தான் பெண்கள் படைக்கப்பட்டார்கள் எனக் கூறி விட முடியுமா ? தலை எழுத்து என்று தள்ளிவிட முடியுமா? இடையறாத தற்செயல் நிகழ்வுகளுக்கு ஊடாக இயக்க விதிகள் செயல்படுகின்றன என்ற ஏங்கல்ஸ்ஸின் வரிகளை மனித வாழ்வின் இணையும் நிகழ்வுடன் ஒப்பிட்டு கருப்பையின் அர்த்தமே பெண்ணாகப் பிறந்ததால் பிள்ளை கொடுக்கத்தான் என ஆணி அடிக்க முடியாது. விலங்குகளில் ஆண் விலங்குகள் பெண் விலங்குகளை சைட் அடிப்பதில்லை . ஆனால் மனிதரில் மட்டும் இந்தக் கொடுமை பெரியார், பெண்கள் தங்கள் கருப்பைகளை வெட்டி எறிய வேண்டும் " என்று ஆவேசத்துடன் கூறியதை இத்தகைய பண்பாட்டுத் தளத்தில் வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாய்மை தான் பெண்மை என்று சுருக்குகிற பார்வை சரியல்ல. குட்டி ரேவதியின் முலைகள் பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பிக்கும் அத்தியாயம் ஆண்களின் பார்வையில் பெண்கள் பற்றிய எழுத்து எவ்வாறு மாற வேண்டும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். பெண் உடல் அழகிப் போட்டிகளால் எவ்வாறு சுருங்கி கற்பிதமாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆதவன் தீட்சண்யா எழுதிய மழை என்ற தலைப்பிலான கவிதையையும் முதலில் சொன்ன முலைகள் பற்றிய கவிதையையும் ஒப்புமைப் படுத்துகிறது. போர்னோகிராபி சேனல்கள் பெண்களது உடலை அங்கம் அங்கமாகச் சிதைத்து விற்று வருவது உள்ளிட்ட பல விஷயங்களை அலசுகிறது. தன் உடலைத் தாண்டி வெளிவர முடியாத நிலையில் பெண்ணை இருத்தி வைத்து அவளுடைய சிந்தனை , அறிவாற்றல் , படைப்பாற்றல் , அரசியல் மதிநுட்பம் ஆளுமை என எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடுகிறோமே , பெண் தன் உடலைத் தாண்டுவது எப்படி? என்ற அழுத்தமான கேள்வியை இந்த சமூகத்தின் முன் வைத்து பெண்ணை இந்த ஆண்கள் உடலைத் தாண்டி சக மனுஷியாக நடத்தும் நாள் என்று தான் வருமோ ? பெண்களின் அழகிற்கு புதிய அர்த்தங்கள் ஆண் - பெண் குழந்தைகளின் தலையில் அவர்களின் உடல் பற்றி ,அழகு பற்றி ஒரு கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருவதும், அழகு குறைந்த பெண்களின் மன உணர்வுகள் பற்றிப் போதிய அளவுக்கு நம் சமூக மனம் கவலை கொள்ளாததும் பற்றிய கருத்தை மாற்றம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அழகின் புதிய அர்த்தங்கள் முடிவுக்கு வரும் பொழுது பேரா.ஆர் .சந்திரா அவர்களின் கடிதம் தாய்மை தத்தெடுத்தல் சில மாயைகளும் உண்மைகளும் என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான கருத்து இந்தியாவில் ஒரு பெண் பிறவி எடுத்தால் 25 மதிப்பெண் + பூப்படைதல் 25 மதிப்பெண் + திருமணம் என்றால் 25 மதிப்பெண் + தாய்மை 25 மதிப்பெண் , ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கும் சமுதாயம்.. ஆணாதிக்க சிந்தனை சட்ட வடிவம் பெறும் அளவிற்கு டிரஸ் கோடு பற்றிய விளக்கங்களை பரிணாம வளர்ச்சியின் போக்கில் விளக்கி பெண்ணின் பாலுறவு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் கற்பு என்ற ஆயுதத்தை அதன் இயல்புகள் பற்றி ஆராய வைத்து பெண் உடை என்பது வீரம் , அறிவு போன்ற அம்சங்களோடு பொருந்தாது என்கிற மரபுக் கருத்தைப் பற்றியும் அதை உடைத்த ஒரு செயலாக சீனாவில் மாசேதுங் ஆண் - பெண் பேதம் தவிர்க்கச் செய்த ஒரு கலாச்சாரப் புரட்சி பற்றியும் விளக்கம் தருகிறது பெண்களின் கண்ணைப் பார்த்துப் பேசப் பழகாத ஆண் மனம் தான் திருத்தப்பட வேண்டுமே ஒழிய அதற்கும் பெண்ணையே பொறுப்பாக்கி டிரெஸ் கோட் கொண்டு வருவது ஆணாதிக்க சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சில கவிதைகள் சில பாடல்கள் வழியே தொல்காப்பியம் முதற்கொண்டு எம்.ஜி.ஆர் பாடல் வரை பெண்கள் பற்றி எப்படி இருக்க வேண்டும் என காலம் காலமாக ஆண் சமூகம் சொல்லிக் கொண்டு வருவது பற்றி எடுத்துக் கூறுவது வேறொரு பார்வை. பெண் உடம்பின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் எவ்விதம் வர்ணிக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதுகிற அளவுக்கு கேடு கெட்ட பண்பாட்டை நாம் கொண்டிருப்பது உண்மையில் கேவலமே . பெண்களை மென்மையாகச் சொல்லிச் சொல்லியே சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய சினிமாப் பாடல்கள் வரை கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கிய வரலாறு , பிரிட்டிஷ்காரனும் வெண்டைக் காய்க்கு லேடீஸ்பிங்கர் (பெண் விரல்) எனப் பெயரிடும் அவலம் , உழைக்கும் பெண்கள் பற்றிய சிறு பேச்சும் இல்லாத சூழல் இவை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பெண்களை எவன் சொன்னது வீக்கர் செக்ஸ் என நம்மை கேள்வி கேட்கவும் தூண்டும் பொருள் பொதிந்த பக்கங்கள் நமக்குள் கனலாகின்றன. பெண் மீது சுமத்தப்படும் குணங்களை 2 விதமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஒன்று உயிரியல் ரீதியானது அது தான் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதும் பாலூட்டலும் , இதை நிச்சயமாகக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பில்லை. அது தவிர தாய்மை , பெண்மை , மென்மை போன்ற 'மை'கள் எல்லாம் யாரு வச்ச மை ? பெண் கல்வி குறித்து அலசல் , பள்ளிகள் ஆண் பெண் குழந்தைகளுக்கான தண்டனைகளை எவ்வாறு உடல் சார்ந்து தந்தன ? என்பதை ஏலாதியின் ஒரு பாடலோடு சமூக மனதில் பொதுப்புத்தியில் இருப்பதை ஏன் கேள்விக்குள்ளாக்கவில்லை என்பதாக நம்மை இடித்துரைக்கிறது. குறுந்தொகையின் வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல் மனை யுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்பதைக் கூறும் போது , சமூகம் இன்னுமே அப்படித்தான் நம்புகிறது கல்விப் பிரிவுகள், கணினித் துறை முதல் எல்லாவற்றிலும் பெண் கல்விக்குத் தடை, பெண் சமத்துவ உணர்வு எங்கும் இருப்பதில்லை. வரலாற்றைப் பயிற்றுவிக்கும் போது அதில் நிகழ்ந்துள்ள பெண் புறக்கணிப்புப் பற்றிச் சொல்ல வேண்டும் , அறிவியலில் மறைந்துள்ள ஆணாதிக்கப் பார்வையை அடையாளம் காட்ட வேண்டிய கல்விதான் நமக்குத் தேவை என்பதிலிருந்து தொடங்குகிறது நமது அடுத்த வேலை. மருமகள் வாக்கு என்ற சிறுகதை, காலம் காலமாகப் பெண் எவ்வாறு வதங்குகிறாள் , தர்மங்களையும் நம்பிக்கைகளையும் சுமக்க வதைக்கப்படுகிறாள் என்பதை ஆய்வு செய்கிறது. ஊடகங்கள் , பெண்கள் பற்றிய செய்திகளை எவ்வாறு காட்டுகின்றன நமது அன்றாட வாழ்வியலில் பெண்களுக்கான புரிதல்களை பரிசீலிக்க வேண்டும் ஆண் குற்ற உணர்வு கொள்ள வேண்டும் , ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பெண்களை அடிமை கொண்ட பாவத்தின் கறை படிந்த நம் கரங்களை , இதயங்களை , பெண் விடுதலைக்காகப் போராடும் செயல்களால் கழுவ வேண்டும். இப்படியாக ஒரு புத்தகம் நம்மை தூங்க விடாமல் செய்கிறது, படிப்பதோடு இல்லாமல் செயல்களில் இறங்க அழைக்கும் நூல். *நூல் -பெண்மை என்றொரு கற்பிதம்* தமிழ் செல்வன் தோழமையுடன் சீனி.சந்திரசேகரன்.